யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வெளியான வர்த்தமானி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மௌனம் காத்ததுடன் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவிக்கையில்,
“வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினேன். அது சங்கமித்தையால் நடப்பட்டது என்பது தவறான தகவல் எனக் குறிப்பிட்டனர்” என்பதையும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்படும் இன ஐக்கியம்
“நாட்டில் இன ஐக்கியம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் இன ஐக்கியம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது” என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் வர்த்தமானி தொடர்பில் பேசும்போது அமைச்சரவையில் கலந்துகொண்ட துறைசார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மௌனம் காத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்வதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது இதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.