உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக நாட்டின் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்யும் திட்டத்தில் பெண் ஒருவரை உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த நிலையில், சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
பெயர் வெளிப்படுத்தப்படாத குறித்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் திட்டம்
தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், துரோகிகளுக்கு எதிராகவும் உக்ரைன் போரிடும் என ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதலானது ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் உக்ரைனின் திட்டம் என்றே ரஷ்யா கூறி வருகிறது.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாட்களில், தமது மரணத்தை புடின் விரும்புகிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.