ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த மோசடி சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (10.08.2023) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை, அலோபோமுல்ல, அருக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த சந்தேக நபர் பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வருபவர் எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் இருப்பதாகவும் மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.