ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இந்த முறையும் அமெரிக்காவே, ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி, மார்ச் 24 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்று, கடந்த வாரம் இடம்பெற்ற ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் பிரித்தானியாவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும், இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்த முறையும் அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2017 ஆம் ஆண்டு தீர்மான வரைவு இன்னமும் தயாரிக்கப்படாத போதிலும், இது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அடியொற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த 18 மாதங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கும் வகையில் இந்த தீர்மானம் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளை, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கவனத்தில் எடுத்து, நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மான வரைவு அமையும் என்று ஜெனிவாவிலுள்ள உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை குறித்த தீர்மான வரைவு பெரும்பாலும், ஒரு பக்கம் அல்லது அதனை விடவும் குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த முறை கொண்டு வரப்படும் தீர்மானத்துடன் இலங்கை போட்டி போடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்குமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.