எதிர்வரும் அக்டோபர் மாதம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் சீன ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இது குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் ‘ஷீ யான் சிக்ஸ்’ எதிர்வரும் அக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நவம்பர் மாதம் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென்னிந்திய பெருங்கடல் ஆய்வு
எனினும் குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,999 தொன் எடையுள்ள ‘ஷி யான் சிக்ஸ்’ என்ற கப்பல் சீனாவின் குவாங்சோவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாகவும், தற்போது தென்சீனக் கடலில் தெற்கு நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய நீர்வள அபிவிருத்தி மற்றும் முகவரகம் அல்லது நாரா நிறுவனத்துடன் இணைந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சீனக் கப்பலுடன் விஞ்ஞானப் பயணத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட விரிவான ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இந்திய அரசாங்கம், சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகை குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.