திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுவதற்கு தடை விதிக்கும் வகையில் ஆளுநர் ஒருவர் செயற்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சீலவங்கதிஸ்ஸவிற்கு, பிரதேச செயலாளர் ஊடாக செந்தில் தொண்டமான் அறிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொரலுகந்த ரஜமகா விகாரையின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில், விகாரையை அண்மித்துள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஆர்.சம்பந்தன், ஆளுநருக்கு அறிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பு
இந்த விடயங்களை ஆராய்ந்த ஆளுநர், பிரதேச செயலாளர் ஊடாக, இந்த உத்தரவை, விகாரைக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, குறித்த பகுதியை அண்மித்து, புதிதாக விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அம்பிட்டிய சீலவங்கதிஸ்ஸ தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு அமைய, குறித்த பகுதியில் விகாரையொன்றை நிரமாணிப்பதற்கு 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் திகதி புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், அந்த பகுதியானது 99.9 வீதம் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதி என ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த பகுதியிலுள்ள மக்கள் தொடர்பான அறிக்கையொன்றை கடவத் பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய இலுப்பைகுளம் பகுதியில் நான்கு உறுப்பினர்களை கொண்ட 2 சிங்கள குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலுப்பைகுளம் பகுதியில் 2202 உறுப்பினர்களை கொண்ட 538 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பெரியகுளம் பகுதியில் நான்கு உறுப்பினர்களை கொண்ட 3 சிங்கள குடும்பங்களும், 1789 உறுப்பினர்களை கொண்ட 626 தமிழ் குடும்பங்களும் வாழ்ந்து வருவதாக கடவத் பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்தமயமாக்கல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதியில் பலவந்தமான முறையில் பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் சிவன் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டு, அந்த இடம் பௌத்தர்களுக்கு சொந்தமானது என பௌத்தர்கள் கூறிய நிலையில், கடந்த மாதம் அங்கு அமைதியின்மை நிலவியது. அவ்வாறு பல்வேறு பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையிலேயே, திருகோணமலை பொரலுகந்த ரஜமகா விகாரை நிர்மாணிக்க தயாராகிய பின்னணியில், அதனை ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.
பௌத்தர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறான பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு தான் ஆதரவு எனவும் செந்தில் தொண்டமான் கூறினார்.
எனினும், அத்துமீறி நிர்மாண பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.
பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுவதற்கு தடை விதிக்கும் வகையில் ஆளுநர் ஒருவர் செயற்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.