வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை உள்ளடக்குமாறு மத்திய வங்கி ஆலோசனை வழங்கியது என அரச அச்சக பதில் ஆணையாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட 1895/19 என்ற வர்த்தமானி அறிவித்தலில் மத்திய வங்கியின் ஆலோசனைக்கு அமையவே மஹிந்தவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் கொள்கைத் திட்டமிடல் அமைச்சராக மஹிந்தவின் பெயரை உள்ளடக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் மஹிந்தவின் பெயர் உள்ளடக்கப்பட்டது ஓர் பிழையாகும்.இது குறித்து அரச அச்சகத்தின் அச்சுப் பிழை திருத்தும் பிரிவினர் எனக்கு அறிவித்திருந்தனர். இது குறித்து மத்திய வங்கியின் கடன் பிரிவிடம் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்திருந்தேன்.
இதன் அடிப்படையில் அரச அச்சகத்தைச் சேர்ந்த டபிள்யு.ஆர்.ஜே. டி மெல் என்ற அதிகாரி மத்திய வங்கியின் கடன் பிரிவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து அறிவித்திருந்தார்.
இதற்கு மத்திய வங்கியில் கடமையாற்றி வரும் வாசனா என்ற அதிகாரி மஹிந்தவின் பெயரிலேயே அச்சிடுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிப்பது தொடர்பான திகதி 2015.01.01 என்ற திகதியிடப்பட்டிருந்த காரணத்தினால் அப்போதைய நிதி அமைச்சரின் பெயரில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதியே இந்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுமாறு அரச அச்சகத்திற்கு மத்திய வங்கி ஆவணத்தை அனுப்பியது எனவும், அதன் போது நாட்டின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எனவும் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.