இலங்கையிலுள்ள குழந்தைகள் இந்திய சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிய கதையை கேட்கும் போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்பெல்லாம் வௌ;வேறு முதலீட்டாளர்கள் எங்களிடம் வந்து மூதலீடு குறித்து பேசி செயற்படுவர்,ஆனால் இப்போது அப்படி இல்லை,
இந்தியாவுக்குச் சென்று விற்றுவிட்டதை நாம் அறியோம். இன்னும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நிதி குறித்த முழு அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்திற்கும் தெரியவில்லை.
அதானியிடம் என்ன பேசினார்கள் என்றும் இந்தியா சென்ற போது என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. அதானிக்கு என்ன விற்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சி கப்பல் விவகாரத்தால் இந்தியா மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கைப் பிள்ளைகள் சீன ஹிந்தி கற்க வேண்டும் என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் முதல் பாடசாலை கல்வியை கற்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக வழங்க வேண்டும்.
பொருட்களின் விலை,மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் அதிகரித்திருப்பதாலும் தரம் குறைந்த மருந்தாலும், மருந்தின் விலை மிக அதிகமாக உயர்ந்ததாலும் மருத்துவமனைகளுக்குச் சென்று சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.
இவ்வாறு இருக்கும் போது இன்று நாட்டின் பிள்ளைகள் சீன ஹிந்தி மொழிகளை கற்கச் சொல்கிறார்கள்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது அரசாங்கம் அமைக்கப்பட்டு சஜித் பிரேமதாச பிரதமரான பின்னர், ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்டபடி விரைவில் நடத்த ஏற்பாடு செய்வோம்.
பலம் வாய்ந்த அரசியல் கட்சியினால் ஜனாதிபதி வேட்புமனுவை பெற்றுக்கொள்ள தற்போதைய ஜனாதிபதியினால் முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.