உலகலாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளையும் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை அனுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சமுதாயத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும்.
சவால்களை முறியடிக்கக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கல்வியால் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் கொண்ட கல்வி முறைமையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும்.
பாடங்களுக்கு உகந்த வகையிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். மேலும், ஆங்கில மொழி, சீன மொழி , ஹிந்தி மொழி ஆகிய மொழி அறிவுகளையும் பெற்றிருக்க வேண்டும்.
அப்படியானால், இந்த விடயத்தில் அறிவைப் பெறக்கூடிய பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம்.
பணம் காரணமாக கல்வியை நிறுத்தாமல், மாணவர்களுக்கு அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு, வெளிநாடுகளைப் போல் மானிய முறையில் கடன் வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.
இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும்.
புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.