சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் பல்லேகலே தேசிய பௌத்த நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் அம்பலமானதன் பின்னர் யாருக்கு மெய்யாகவே மாரடைப்பு ஏற்படும் என்பதனை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
இந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பாரியளவு கடன் தொகை மற்றும் ஊழல் மோசடிகள் குறித்து எதிர்காலத்தில் அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
எனது ஆட்சிக் காலத்தில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டதாக போலியாக பிரச்சாரம் செய்து வரும் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார விவகாரத்திற்குப் பொறுப்பான பந்துல குணவர்தனவிற்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
எனக்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
இது தொடர்பில் விளக்கம் அளித்து ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொடர்பிலான மெய்யான தகவல்கள் தெரிந்தால் மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.