ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கிய ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ நிர்வாகிகள் பட்டியலை 27-ந்தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் நேற்று நிர்வாகிகளை இறுதி செய்யாததால் 2 அல்லது 3 நாட்களில் முறையாக அறிவிப்பதாக ஜெ.தீபா கூறினார்.
பின்னர் அவர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகளை எப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளீர்கள்?
பதில்:- மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆதரவாளர்களை முதலில் ஒழுங்குபடுத்திவிட்டு, ஆதரவாளர்களின் ஆலோசனையின் பேரிலும், தொண்டர்கள் விரும்பும் வகையிலும் 2 அல்லது 3 நாட்களில் பேரவை நிர்வாகிகளை முறையாக அறிவிப்பேன்.
கேள்வி:- பேரவைக்கு என்ன கொள்கைகள் வகுத்து உள்ளீர்கள்?
பதில்:- தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் நலன் கருதியே பேரவை கொள்கைகள் இருக் கும். அவை தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது. முக்கிய நிர்வாகிகளை அறிவித்த பின்னர் பேரவையின் கொள்கைகளும், அரசியல் களத்திற்கு தேவையான அறிவிப்புகளும் வெளியிடப்படும்.
கேள்வி:- பேரவை பொருளாளராக இருப்பதாகவும், பின்னர் பொதுச்செயலாளராக இருப்பதாகவும் கூறினீர்கள். தற்போது என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்?
பதில்:- பேரவை பொதுச்செயலாளராக நான் செயல்படுவேன்.
கேள்வி:- மாவட்ட அளவில் நிர்வாகிகளை எப்போது அறிவிப்பீர்கள்?
பதில்:- தகுதி, அரசியல் ஈடுபாடு, சமூகப்பணி, அ.தி.மு.க.வில் ஆற்றிய பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஒருசில வாரங்களில் முறையாக அறிவிப்பேன்.
கேள்வி:- நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- திட்டமிட்டு இந்த செயலில் சிலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. என்னுடைய ஆதரவாளர்களை எனக்கு எதிராக செயல்படவும், பேசவும் வைத்ததுடன், போலீசாரையும் வரவழைத்துவிட்டனர். இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி என்னை பயமுறுத்தி அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. ஜெயலலிதா விட்டுச்சென்ற மக்கள் பணியை தொடருவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
கேள்வி:- உங்கள் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களை கூடி நிற்கக்கூடாது என்று போலீசார் கூறுவது குறித்து?
பதில்:- நான் அவர்களை சந்திப்பதற்கும், அவர்கள் என்னை சந்திப்பதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஆதரவாளர்களை நான், என் வீட்டுக்கு உள்ளே அழைத்து தான் பேசி வருகிறேன். ரோட்டில் கூடி நிற்பதற்கு நானும் அனுமதிப்பதில்லை. எனவே அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று போலீசாரிடம் கேட்டுள்ளேன்.
கேள்வி:- போலீசாரின் இந்த நடவடிக்கையை பற்றி?
பதில்:- என் வீட்டுக்கு உள்ளே வர எவரையும் அனுமதிக்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் என்னிடமே கூறுகின்றனர். என் வீட்டுக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று எனக்கு தெரியும். என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அரைமணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர். என் வீட்டில் உள்ளவற்றையும், அருகில் உள்ள வீடுகளில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அப்புறப்படுத்த சொல்வது சரியல்ல. இதுபோன்று போலீஸ் அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. என் வீட்டுக்கு பாதுகாப்பும் தேவையில்லை.
கேள்வி:- பேரவை சார்பில் முதன்முதலாக மக்கள் பணியை எங்கு தொடங்க உள்ளீர்கள்?
பதில்:- ஆயிரக்கணக்கானோர் தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்து உள்ளனர். அவற்றை ஒழுங்குபடுத்தி, முறையாக அரசியல் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதற்கு பிறகு தான் எங்கு மக்கள் பணி தொடங்குவது என்று முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.