இலங்கை மருத்துவ சபையினால், விதிக்கப்பட்ட இடைநிறுத்தத்தை மீறி சர்ச்சையில் சிக்கிய சட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை அறிவிக்கும் சுகாதார அமைச்சின் கடிதம் கடந்த 17ஆம் திகதி, குறித்த மருத்துவருக்குக் கிடைத்ததாகவும், ஆனால் கட்டாய விடுப்புக்கான குறிப்பிட்ட காரணம் அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சர்ச்சைக்குரிய சட்ட மருத்துவ அதிகாரி நாளை (20.08.2023) மீண்டும் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. எனவே அந்த தகவல்களில் தெளிவில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தம்
குறித்த மருத்துவர் தனது சர்ச்சைக்குரிய மற்றும் முரண்பாடான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டவராவார்.
2013இல் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் 2014இல் சுதந்திர வர்த்தக வலயத்தில் உணவு நச்சுத்தன்மையினால் ஒரு தொழிலாளியின் மரணம் போன்ற விடயங்களால், ஆரம்பத்தில் எட்டு மாதங்களுக்கு அவருடைய பணி இடைநிறுத்தப்பட்டது. 2022 டிசம்பர் 20 இல் தொடங்கி இந்த இடைநீக்கம் ஆகஸ்ட் 20 அன்று முடிவடையும் என்று கூறப்பட்டது.
குழந்தையின் மரணம் போன்ற சம்பவங்கள்
இருப்பினும், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்கப் பிரேதப் பரிசோதனைகளைத் தொடர்ந்தார்.
இதன்படி, முக்கிய வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மற்றும் 3 வயதுக் குழந்தையின் மரணம் போன்ற சம்பவங்களின்போது அவரே பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
முன்னதாக தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்த சட்ட மருத்துவ அதிகாரி, தாம் பிரதம சட்ட மருத்துவ அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே தம்மீதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று குற்றம் சுமத்தியிருந்தார்.