ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சரஸ்வதியின் 6 வயது மகன் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகிலுள்ள புதரில் 2 சிறுத்தை குட்டிகள் தென்பட்டுள்ளது. அந்த குட்டிகளை பூனை என நினைத்து வீட்டுக்கு எடுத்துவந்துள்ளான்.
இதனையடுத்து, 2 சிறுத்தை குட்டிகளையும் பாலூட்டி வளர்த்து அதனோடு விளையாடி மகிழ்ந்துள்ளான். சிறுவனின் பெற்றோர்களுக்கும்கூட அது சிறுத்தை குட்டி எனத் தெரியவில்லை. சிறுத்தை குட்டிகள் அவனை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது.
2 நாட்கள் கடந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் சிறுத்தை குட்டிகள் சிறுவனிடம் விளையாடிதை பார்த்துள்ளார். உடனே அவர், சிறுத்தைக் குட்டிகளை ஏன் வளர்க்கிறீர்கள் என கேட்டபோது சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் அதனை பூனைக் குட்டி என்று தான் நினைத்தோம் என அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அருகிலுள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தைக் குட்டிகளை மீட்டு வனப்பகுதியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் சென்று விட்டனர். ஆனால், பால் கொடுத்த சிறுவனை பிரிய மறுத்து அடம்பிடித்ததால் வனத்துறை அதிகாரிகள், இந்த பாசப்போராட்டத்தை பார்த்து நெகிழ்சியில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், இந்த சிறுத்தைக் குட்டிகளை சிறுவன் தூக்கி வந்தததை அதன் தாய் சிறுத்தை பார்த்திருந்தால் மிகப்பெரிய ஆபத்து நேர்ந்திருக்கும். சிறுத்தை ஒரே நேரத்தில் 2 முதல் 6 குட்டிகளை ஈன்றெடுக்கும். 10 நாட்களுக்கு பின்னரே அந்த குட்டிகள் கண் திறக்கும். 2 வயது வரை அவை தாய் சிறுத்தையின் பாதுகாப்பிலேயே இருக்கும் என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.