டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2வது போட்டியில் யு.ஏ.இ.யும் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 56 ரன்னும், மார்க் சாப்மன் 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆயன் அப்சல் கான் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
பசில் ஹமீது 24 ரன்கள் சேர்த்தார். இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. நியூசிலாந்தின் வில் யங் ஆட்ட நாயகன் விருதும், சாப்மன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.