உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக சவூதிக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை சவூதி அரேபிய எல்லைக் படையினர் சுட்டுக் கொன்றதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (HRW) அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு ‘அவர்கள் எங்கள் மீது துப்பாக்கி குண்டு மழை பெய்தனர்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யேமன் எல்லை வழியாக தங்கள் நாட்டுக்கு அடைக்கலம் தேடி, பெரும்பாலும் எத்தியோப்பியாவிலிருந்து வரும் ஆப்பிரிக்கா்கள் மீது சவூதி அரேபிய எல்லைக் காவல் படையினர் மற்றும் பொலிஸார் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
செயற்கைக்கோள் ஆதாரங்கள்
மேலும், அகதிகள் மீது குண்டுகளை வீசியும் அவா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், நூற்றுக்கணக்கான அகதிகள் பலியாகியிருப்பது செயற்கைக்கோள் படங்கள், உயிர் தப்பிய அகதிகள் அளித்த தகவல்கள் போன்றவற்றின் மூலம் உறுதியாகியுள்ளது.
சவூதி படையினரின் தாக்குதலில் எத்தனை அகதிகள் உயிரிழந்தாா்கள் என்பது குறித்து துல்லியமாகக் கூறுவது கடினம் ஆகும். ஆனால், குறைந்தது 655-இலிருந்து அதிகபட்சமாக ஆயிரக்கணக்கானவா்கள் வரை சவூதி அரேபிய படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்.
தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ஆப்பிரிக்க அகதிகளின் கால்களை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுத்து சித்திரவதை செய்வதையும் சவூதி அரேபிய படையினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட படங்கள்
இதன் காரணமாக, ஏராளமான அகதிகள் தங்கள் கால்களை நிரந்தரமாக இழந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மே 12-ஆம் திகதியிலிருந்து 2023 ஜூலை 18-ஆம் திகதிவரை எடுக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட காணொளிகளை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம்.
அத்துடன், சவூதி அரேபியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான அகதிகள் வழித் தடத்தில் பல நூறு கி.மீ. சுற்றளவில் கடந்த 2022 பிப்ரவரி முதல் 2023 ஜூலை வரை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.
அவற்றின் மூலம், உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஏராளமான அகதிகள் சாலையோரங்களில் கிடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், முகாம்கள், மருத்துவ நிலைகள் ஆகியவை காயமடைந்த அகதிகளால் நிரம்பியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
அகதிகள் முகாம்களின் அருகே இருந்த இடுகாடுகள் வெகுவேகமாக விரிவடைந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
மேலும், யேமனிலிருந்து தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்காக அகதிகள் பயன்படுத்தும் வழித் தடங்களில் பிரம்மாண்டமான ராணுவக் கட்டமைப்புகள் உருவக்கப்பட்டிப்பதும் அந்தப் படங்கள் மூலம் தெரிய வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர் சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மன்சூா் ஹாதியின் தலைமையிலான அரசு தெற்குப் பகுதிக்கு இடம் மாறியது.
அதையடுத்து, ஹாதிக்கு ஆதரவாக அண்டை நாடான சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் 2014 முதல் 2021 வரை 3.77 லட்சம் பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து, எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவில் அடைக்கலம் பெற விரும்புவோரை ஹூதி கிளா்ச்சியாளா்கள் சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குள் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் சவூதி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது (HRW) அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.