இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம்(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையானது 34 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்கும் டொலர்கள் உண்மையில் இலங்கைக்கு வருகின்றதா? என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறு கிடைக்க வேண்டிய வருமானம் உண்டியல் போன்ற பணப்பறிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்காமல் போனது.
எனவே இவற்றைத் தடுத்து நமது ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய டொலர்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
அந்த வகையில் புதிய சுங்க அனுமதிப் பொறிமுறையொன்றை செயற்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரத்தினக்கல் தொடர்பான முழு விபரங்களை பெற்று, அதன் வருமானம் மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிட்டுள்ளார்.