இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதுவரை விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை. இந்திய அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 டி20 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.