உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவது போல இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின வாரம் பெரிய வாரமாக அனுஷ்டிக்கப்படும். அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறப்பார். அதன்பின்பு 3 நாட்கள் கழித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுவார். இதுவே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
பெரிய வாரத்திற்கு முந்தின 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுஷ்டிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் நாளை 1-ந் தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
இதனை சாம்பல் புதன் என அழைப்பார்கள். இந்த நாளில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு செல்வோர் அனைவரது நெற்றியிலும் சாம்பலால் சிலுவை குறியிடப்படும். மண்ணில் பிறந்தவர் மண்ணுக்கே திரும்புவர் என்பதை நினைவு படுத்தவே இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இதை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள்.
ஏழை, எளியோருக்கு உணவு அளித்து தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். மேலும் அவர்களின் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. நாளை முதல் தவக்காலத்தின் 40 நாட்களும் அனைத்து ஆலயங்களிலும் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து ஆலயங்களிலும் சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெறும்.
மேலும் இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதும் உண்டு. பல்வேறு ஆலயங்களில் இருந்து அவர்கள் திருப்பயணமாக வெளியூர்களில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு செல்வார்கள்.