நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார்.
முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நேற்று சரத் வீரசேகரவினால் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்திருந்தார்.
அத்தோடு, அவரது மனைவி தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது நிலையியற் கட்டளை 83 ஐ மீறும் செயற்பாடாகும். எவருடைய தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்து வெளியிட முடியாது.
இவ்வாறு இருக்கும்போது, சரத்வீரசேகர இவ்வாறு இவர் கருத்து வெளியிடுவது இரண்டாவது தடவையாகும்.
ஏற்கனவே, அவர் சட்டத்தரணிகள் சங்கத்தையும் என்னையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நான் நாடாளுமன்றில் எந்தவொரு நீதிபதியையும் பெயர்குறிப்பிட்டு கருத்து வெளியிடவில்லை.
நீதிபதிகளின் கருத்துக்கள் தொடர்பாக விமர்சிக்கலாமே ஒழிய, நீதிபதியின் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேச முடியாது.
ஒரு தமிழ் நீதிபதி எப்படி தன்னை விமர்சிக்க முடியும் எனும் தொனியில்தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது பாரதூரமான விடயமாகும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு உரிய வகையில் அவர் நேற்று நடந்துக் கொள்ளவில்லை.
எனவே, சபாநாயகர் இவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.