இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒமேஸ் சைகலின் மருமகள், பேரன் மற்றும் இருவர் இலங்கையில் உயிரிழந்த விவகாரத்தில் நுகர்வோர் குறைதீர் மன்றம், 50 லட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு இரண்டு சுற்றுலா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாட்டாளர்களான சைகலின் மகன் யோகேஸ் மற்றும் பேத்தி ஐஸ்வர்யா ஆகியோர், தங்களது ஐந்து பேர் கொண்ட குடும்பம், மூன்றாம் தரப்பு சேவை வழங்குனரை உள்ளடக்கிய சுற்றுலா முகவர் மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
தென்னிலங்கையில் தாம் சுற்றுலாவில் இருந்தபோது தமது வாகனத்தின் சாரதியாக 67 வயதான ஒருவர் அமர்த்தப்பட்டதாக முறைப்பாட்டாளர் யோகேஸ் கூறியுள்ளார்.
இந்தநிலையில் 2019 டிசம்பர் 23,அன்று, குடும்பத்தை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு டிரக் வாகனம் மீது மோதியதில் அதில் இருந்த மூன்று பேர் மற்றும் ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
முறைப்பாட்டாளர்களான யோகேஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து கவனக்குறைவு மற்றும் சேவைகளில் குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை, தவறான விளம்பரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவாக ஒரு லட்சம் ரூபாயை அவர்கள், சுற்றுலா முகவர் நிறுவனத்திடம் கோரினார்கள் அத்துடன் நட்டஈடாக 8.99 கோடி ரூபாயை கோரினார்கள்.
இந்த மனுக்களை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம்,2023 ஆகஸ்ட் 16 திகதியிட்ட அதன் உத்தரவில், இரண்டு பயண நிறுவனங்களுக்கும் உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முறைப்பாட்டாளர்களுக்கு 50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தவறினால் இரு நிறுவனங்களும் மேலும் 10 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.