இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் ஒரு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கும், 100 000 மக்கள் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களான உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு என்பவற்றினால் இலங்கையின் பயிர்ச்செய்கை மற்றும் உணவுப்பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட ஆய்வறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு ஆகியவற்றின் பயிர்ச்செய்கை மற்றும் உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டுக்குழு கடந்த மார்ச் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
மார்ச் 31 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருந்த அக்குழு, இரண்டு குழுக்களாகப் பிரிந்து நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ததுடன் 2023 ஆம் ஆண்டில் மொத்த பயிர்ச்செய்கை உற்பத்தியின் அளவு, 2023 இல் நாட்டின் இறக்குமதித் தேவைப்பாடு மற்றும் நாட்டிலுள்ள குடும்பங்களின் உணவுப்பாதுகாப்பு நிலை என்பன தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொண்டது.
பெரும்போக பயிர்ச்செய்கை
இம்மதிப்பீடுகளை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் வரவிருக்கும் பெரும்போக பயிர்ச்செய்கை காலம் வரையில் நாட்டின் விவசாயத்துறைக்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் விவசாயத்துறையின் மீட்சியை ஊக்குவிப்பதற்கு நடுத்தரகாலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்பன அடையாளங்காணப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக குடும்பங்களின்மீது ஏற்படக்கூடிய எதிர்மறைத்தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய உணவு, நிதி மற்றும் மனிதாபிமான உதவி வழங்கல் செயற்திட்டம் குறித்த பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் விளைவாக அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக 0.25 – 2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் குறுநில விவசாயிகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்வாண்டில் 1.16 மில்லியன் தொன் கோதுமை, 130 000 தொன் சோளம், 465 000 தொன் அரிசி மற்றும் 200 000 தொன் உருளைக்கிழங்கு என்பன உள்ளடங்கலாக மொத்தமாக 1.8 மில்லியன் தொன் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட குழுவினால் நாட்டிலுள்ள குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், 100 000 மக்கள் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 56 சதவீதமான குடும்பங்கள் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்குப் பல்வேறுபட்ட மாற்றுவழிகளைக் கையாளும் அதேவேளை, கடந்த 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மிகக்குறைந்த மட்டத்திலான முன்னேற்றமே அடையப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட இதனையொத்த மதிப்பீட்டின்படி உணவுப்பாதுகாப்பின்மை நிலை மிகவும் உயர்வாகக் காணப்படும் பிரதேசங்களில் பெருந்தோட்டப்பகுதி (42 சதவீதம்) முதலிடத்திலும், வடமாகாணம் (28) இரண்டாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் (23) மூன்றாம் இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.