டுபாயில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அதிக வட்டி பெற்று தருவதாக கூறி 200 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல தயாரான கணவன் மனைவி தம்பதியரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்றின் பெயரில் தம்பதியினர் இந்த மோசடியை செய்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீர்கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் இந்த வர்த்தக நிலையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அதிக வட்டி
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் தம்பதியினர் வசித்து வந்தனர்.
டுபாயில் உள்ள நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி தருவதாக கூறி பணம் மற்றும் தங்கப் பொருட்களை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த 06 முறைப்பாடுகளை விசாரித்து தம்பதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருபது வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தங்கி இலங்கையில் வர்த்தகம் செய்து வரும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையின் போது, குறித்த நிறுவனத்திற்கு எதிராக 400 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பில் மேலும் ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பயணத்தடை
முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸார், கடந்த மாதம் 14ஆம் திகதி குறித்த தம்பதிக்கு எதிராக பயணத்தடை பெற்றதாகவும், அது தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் தொடக்கத்துடன் இந்த இருவரும் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல தயாராகியுள்ளனர். கடந்த 14ஆம் திகதி, கனடா செல்வதற்கான விசா கிடைத்துள்ளதாகவும், 19ஆம் திகதி அல்லது அதற்கமைய நாட்டை விட்டு வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்த அவர்கள், 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தம்பதியினர் நேற்று முன்தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் பணக்கார வர்த்தகர்கள் வசிக்கும் உயர்பாதுகாப்பு வளாகத்தில் மூன்று மாடி கொண்ட சொகுசு வீட்டில் வாடகை அடிப்படையில் இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் சந்தேகத்திற்குரிய கணவன் மனைவி தம்பதியினரின் இரண்டு பிள்ளைகளும் Audi Q5 சொகுசு காரையும் பயன்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.