ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன், இலங்கை தமிழர்கள் குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் “பொதுவாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச நாடுகள் செயற்பட வேண்டும். பூகோள மனித உரிமைகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சில அரசியல் தலைவர்கள், மனித உரிமை தொடர்பான அமைப்புகளிலிருந்து விலகப்போவதாக அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த ஏழு தசாப்தங்களில் உலக நாடுகள் மனித உரிமை விடயத்தில் அடைந்த முன்னேற்றத்தை அவர்கள் மீட்டுப் பார்க்க வேண்டும்.
ஆகவே இவ்வாறான அச்சுறுத்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றால், உலக மனித உரிமையில் எதனை இழக்கப் போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மனித உரிமைகள் தொடர்பான பல்தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரம் இன்றி உலகளாவிய காலமுறையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சகல மட்டத்திலுமான சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனவா என்பதை எனது அலுவலகம் கண்காணித்து வருகின்றது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடைபெறுகின்றன. அது ஒரு நபருக்கு எதிராகவோ அல்லது அவருடைய அரசுக்கு எதிராகவோ நடத்தப்படுகின்றது என்றே கருதுகின்றேன். பெண்களின் உரிமைகளுக்காக இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் எனது அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டமையை இட்டு பெருமைப்படுகின்றேன். நாம் சகலருடைய உரிமைகளுக்காவும் ஒன்றிணைய வேண்டும்.
இது போன்ற அரசியல் தலைவர்கள் லீக் ஒஃப் நேஷன்ஸ் காலத்திலும் இருந்ததுடன் அப்போதைய பன்நாட்டு கட்டமைப்பில் இருந்து விலகப் போவதாக எச்சரித்தார்கள்.
அப்போது ஏற்பட்ட விடயங்கள் குறித்த அனுபவங்கள் எமக்கு உள்ளது. எனவே நாம் சிலை போன்று அமர்ந்திருக்க மாட்டோம். நாம் இழப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. எமது உரிமைகள் ஏனையவர்களின் அரசியல் இலாபத்திற்காக தூக்கி எறியப்பட முடியாது” எனவும் இதன் போது குறிப்பிட்டார்.