நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலின் கீழ் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 2023 மே ஆம் திகதி 3 கிலோ கிராமிற்கு அதிகமான தங்கம் அதாவது சுமார் 7 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் நவீன கைத் தொலைபேசிகளை அவரது நாடாளுமன்ற சிறப்புரிமை இராஜதந்திர கடவுச்சீட்டு அகியவற்றை முறைகேடாக பயன்படுத்தி சட்ட விரோதமாக கொண்டு வந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விஐபி முனையத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த சட்ட விரோத செயலால் இலங்கை சுங்க பிரிவினர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 75 இலட்சம் ரூபா விதித்ததோடு கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களையும் அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த சம்வத்தை சுங்க பிரிவின் அத்தியட்சகர் நாடாளுமன்ற பொது செயலாளருக்கு கடந்த 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி எழுத்து மூலம் அறியப்படுத்தினார்.
அதற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் 2018 மார்ச் ஏழாம் திகதி நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை ஒழுங்குமுறை மீறப்பட்டுள்ளதோடு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்கள் நம்பிக்கையினையும் துவம்சம் செய்துள்ளார்.
இவ்வாறு நடந்துக்கொள்வது என்பது இந்நாட்டின் மேன்மையான நாடாளுமன்றத்தில் சிறப்புரிமையை மீறிய செயலாகும்.
இந்த காரணங்கள் நாடாளுமன்ற கட்டளைச் சட்டத்தின் கீழ் நெறி முறைகள் மற்றும் சிறப்புரிமைகளின் கீழ் ஆராயப்பட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயவாய் வேண்டுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.