எக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எக்பிரஸ் பேர்ள் கப்பல் வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் குறித்த காப்புறுதி நிறுவனம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது.
அதாவது தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடலாம். இதற்காக 9 பேர் கொண்ட குழுவினை நியமித்தோம்.
குறித்த ஒன்பது பேரும் கடந்த மாதம் சிங்கபூருக்கு சென்று இரண்டு கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் டொலர் நிதியையும் மற்றுமொரு நிதித்தொகையை ரூபாவிலும் செலுத்துவதற்கு அவர்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.
அதற்கமைவாக நீதி அமைச்சு அதனை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சம்மதத்தை கோரி இருக்கின்றார்கள்.
இதன் பின்னர் இந்த வழக்கை வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான உத்தரவொன்றை நேற்றைய தினம் பிறப்பிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
அதற்கமைவாக இந்த வழக்கை வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆனால் அதிலும் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்.