நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மிகவும் ஆபத்தான வலயங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று (26.08.2023) வரை நாட்டில் மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,225 ஆக பதிவாகியுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
அதன்படி, ஜூலை மாதத்தில் 7,369 டெங்கு நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 4,536 டெங்கு நோயாளர்களுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,053 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 12,963 டெங்கு நோயாளர்களும், கண்டியில் 4,976 பேரும், களுத்துறையில் 3,949 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.