இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்க தலையீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.
நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது.
புதிய போராட்டம்
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை, விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும்.
இது, சட்டங்களைத் திணிப்பதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்துடன் தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா? எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுகிறது.” என்றார்.