தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். தலைவலியால் அவதிப்படுவோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. சிலருக்கு தைலம் தேய்த்தாலும் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அந்த நேரத்திற்கு மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து தலைவலி ஏற்படும் பட்சத்தில் உரிய மருத்துவரை ஆலோசித்து, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் வீட்டில் இருந்தபடியே அதற்குரிய யோக முத்திரைகளை செய்தால் நிரந்தர பலன்களை பெறலாம்.
இதில், ஐம்புலன்களையும் குறிக்கும் ஐந்து விரல்களே நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அபான வாயு முத்திரை எனப்படும் மிருத்த சஞ்சீவினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் தலைவலி குறையும்.
இந்த முத்திரையை செய்வதற்கு முதலில் ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடியை தொடவேண்டும். பின்னர் நடு விரலையும், மோதிர விரலையும் கட்டை விரலின் நுனியை தொடவேண்டும். சுண்டு விரலை மேலே நீட்டவேண்டும். இந்த முத்திரை இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்பதால் இதய முத்திரை என்றும் கூறுவார்கள்.
இதேபோல் பட்சி முத்திரை செய்தும் தலைவலியை விரட்டலாம். இந்த முத்திரை செய்வது மிகவும் எளிது. ஆள்காட்டி விரலை சற்று மடக்கி, பெருவிரல் நுனியோடு இணைக்கவும். மற்ற மூன்று விரல்களையும் உள்ளங்கையில் சேருமாறு மடக்கி கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.