ஆப்கானிஸ்தான் வாழ் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் உயர்நிலை கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக் கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவைகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள்
தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த பிறகு அவர்கள் பெண்களின் சுதந்திரத்துக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தலிபான்கள் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளனர்.
பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதித்தது மட்டுமின்றி ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்ல தடை, பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு போன்ற தடைகளும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.