பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 13 ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடர் குறித்த ஒழுங்கமைப்புக்கூட்டம் இன்று ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வின் தொடக்க நாளான செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ்1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான கலந்துரையாடலொன்றும் நடைபெறும். இவ்வாறானதொரு பின்னணியில் பிரித்தானியா தலைமையிலான அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்வரும் வாரம் மெய்நிகர் முறைமையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளன.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்ளவிருப்பதுடன் இதில் பங்கேற்பதற்கு மேலும் சில சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அதற்கு எதிர்மறையான சூழ்நிலையொன்று அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது.
தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் காலதாமதம் மற்றும், வட-கிழக்கு மாகாணங்களில் தொடரும் நில அபகரிப்பு, குருந்தூர் மலை, தையிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் நாட்டில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும் அவர்களுக்கு அறியத்தரப்படவுள்ளது.