புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தில் ஒருசில பிரிவுகள் தொடர்பாக பலர் கவலைகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் அனைவரது கருத்துக்களையும் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்களை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.