வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி காலேயிலும், 2-வது டெஸ்ட் மார்ச் 15-ந்தேதி கொழும்பிலும் தொடங்குகிறது.
இதற்கான இலங்கை அணியின் கேப்டனாக 38 வயதாகும் ரங்கணா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கேப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இவர் இந்த தொடருக்கு தயாராகாததால் ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹெராத் முதன்முதலாக ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது 2-வது முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘‘வங்காள தேச அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் கேப்டன் பதவியை சவாலாக எடுத்துக் கொள்கிறேன்’’ என்று ஹெராத் கூறியுள்ளார்.
வங்காள தேச தொடருக்கான இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு வங்காள தேச அணி இலங்கை சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. முதல் டெஸ்டில் இலங்கை 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிரா ஆனது.
இலங்கை அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது,