ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 இன் புதிய ‘டிஸ்பேச்சஸ்’ ஆவணப்படத்தில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்சவுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி என்றும் அதே சேனலில் ஒளிபரப்பப்பட்ட காணொளியாகளை போலவே கட்டுக்கதை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் வகையில் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும், இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சனல் 4 நிறுவனம் அம்பலப்படுத்தியது.
இந்நிலையில் 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது அபத்தமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.
2015 இல் பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகிய பின்னர் மற்றும் 2019 இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
2016 இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி நீக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் அந்த அமைப்பில் பணியாற்றவில்லை. 2018 பெப்ரவரியில் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்தது பற்றிய இந்த கதை ஒரு கட்டுக்கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.