இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளியிட்டுள்ள வருடாந்தர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எனவும் யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டடமூலம் மற்றும் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் உட்பட முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலங்கள் தொடர்பான பல கவலைகளையும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துரிமையை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.