புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் போதிய நிலம் கையகப்படுத்துதல், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்தல் உள்ளிட்டவைகளால் தள்ளிப்போனது. தற்போதைய மத்திய அரசு திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கியதால் போராட்டம் வெடித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நெடுவாசல் கிராமத்தையொட்டிய சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று அரசியல் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஹைட்ரோ கார்பனுக்கு ஆயிரம் அடி வரை ஆழ்துளையிட்டு பணிசெய்யும் போது, வாயு மற்றும் கழிவுகளால் மண்புழுக்கள் அழிந்து, வாயுவால், மண் தன்மை கெட்டு, விவசாயிகள், விவசாய நிலத்தில் அமைத்துள்ள ஆயிரக்கணக்கான போர்வெல்களில், ஹைட்ரோ கார்பன் கழிவும் கலந்துவிடும் என அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நெடுவாசல் போராட்டக்காரர்கள் இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளனர். அதற்காக நெடுவாசல் போராட்டக்காரர்கள் 10 பேர் கொண்ட குழு சென்னை விரைந்துள்ளது.
முன்னதாக நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் ஆட்சியர் கணேஷ், எஸ்.பி. லோகநாதன் ஆலோசனை நடத்தினர்.