இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும்.
நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா???
புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வந்ததாம். அந்தக் காலண்டரை வைத்து, அதற்குப் பின் வந்த செம்பு காலத்தில் எகிப்த்தியர்களும் சுமேரியர்களும் நிலவின் சுற்றுவட்டப்பாதையைப் பொறுத்தும், அது பூமியை சுற்றி வருவதைப் பொறுத்தும் 29 3/4 நாள் என்பதை ஒரு மாதமாக கணக்கிலிட்டு பின்பற்றி வந்தனர். `Moonth` என்ற வார்த்தை மருகி “Month“ என்றானது என்கிறது வரலாறு.
பிறகு, கி.மு.45 வந்த ஜூலியஸ் சீஸர், மீதமுள்ள 6 மணி நேரத்தை சரிசெய்ய லீப் ஆண்டு என்று ஒன்றை கொண்டுவரலாம் என்று தீவிர ஆலோசனைகளில் இறங்கினார். 4 வருடத்துக்கான கால் நாள்களை சேர்த்து ஒரு நாளாக பிப்ரவரியில் 29 நாட்கள் கொண்டு லீப் ஆண்டு என்ற முறையை கொண்டுவந்தார். ஒரு சில காலங்கள் இந்த முறை காலண்டரையே மக்கள் பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.
இந்த காலண்டர் முறை தவறு என்று பதிமூன்றாம் போப் கிரிகேரியின் கூட்டம் குற்றம் சொல்ல, மக்கள் எதைப் பின்பற்றுவது என்று குழம்பி இருந்தனர். இவர் கூறியது என்னவென்றால், ஒரு வருடத்தை நானூற்றால் வகுத்தால் மீதம் வரக்கூடாது, அவ்வாறு வருமெனில், அதுவே, லீப் ஆண்டு என்று 1582ல் உறுதி செய்தார்.
பிப்ரவரி 30
இவர் கணிப்புடைய காலண்டர் மதச்சார்புடையது என்று மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த கிரிகேரியன் காலண்டரை உலகம் முழுக்க பின்பற்ற வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. அப்போது, ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் மக்கள் பின்பற்றி வந்த காலண்டரும் இந்தக் காலண்டரும் முரண்பட்டவையாக தெரிந்தது.
அவர்களுக்கு அன்று அக்டோபர் 4 (வியாழன்),1582 அடுத்த நாள் இந்த கிரிகேரியன் காலண்டரை அமல்படுத்திய பின் மறுநாள் அக்டோபர் 15 (வெள்ளி), 1582 ஆக அமைகிறது. இதனால், அம்மக்களுக்கு 11 நாள் சம்பளம் கிடைக்காமல் போவதால் `இந்த முறை எங்களுக்கு வேண்டாம்` என்று போராட்டம் வலுப்பெற்ற நிலையில் இருந்தது.
அதே போல், 1752ல் இந்த காலண்டரின் முறை அமல்படுத்திய பிறகு, பிரிட்டனிலும் இவர்கள் பின்பற்றிய காலண்டரை விட12 நாட்கள் முன்னால் சென்றது கிரிகேரியன் காலண்டர். ஆக, அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன.
1700 முதல் ஸ்வீடன் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வந்தது. எந்தக் காலண்டர் முறையை பின்பற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் மக்கள். சிலர் கிரிகேரியன் காலண்டருக்கு முழு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்தனர். அதன்பின், மக்களின் எதிர்ப்பினால், 1712-ம் ஆண்டு தங்களுடைய பழைய காலண்டருக்கே சென்றார்கள் ஸ்வீடன் மக்கள்.
இதனால், 2 நாட்கள் இடித்தது. இந்த காரணத்தில் 1712-ம் ஆண்டில் மட்டும் ஸ்வீடன் மக்கள் காலண்டரில் பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இடம்பெற்றது. இதை வரலாற்றின் ஆச்சரியம் என்றே சொல்லலாம். அவர்கள் மீண்டும் 1753-ம் ஆண்டு கிரிகேரியன் காலண்டருக்கு மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி வரலாற்றில் இடம்பிடித்தது, மறைந்த சுவடாக மாறிவிட்டது.