சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான செயற்பாடு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்போகும் கட்சியின் ஆதரவில் உள்ள தடைகளை நீக்கும் நோக்கில் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் யோசனைக்கு தயாசிறி ஜெயசேகர எதிர்ப்பு வெளியிட்டு வந்ததாக அரசியல் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இதற்கு மாறாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி எவற்றிலும் அங்கம் வகிக்காமல் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயசேகரவை கட்சியிலிருந்து நீக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ரணிலை அடுத்த வேட்பாளராக முன்னிறுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் குழுவுடன் இணைந்து நெருக்கமாக செயற்படுகின்றனர் என அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.