உங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என்றால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தப் பயப்பட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த உண்மை தொடர்பில் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே பாரபட்சமின்றி நடுநிலையான விசாரணையின் மூலம் பேராயர் கர்தினால் தலைமையிலான கத்தோலிக்கச் சமூகத்துக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் உண்மையை அரச தரப்பு வெளிப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
மாத்தறையில் நேற்று (09.09.2023) சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அலற வேண்டிய அவசியமில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக இருப்பவர்கள் யார்?
இதைத் திட்டமிட்டது யார்? இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? இது தீவிரவாத திட்டமா? இதில் அரசியல் நோக்கங்கள் இருந்ததா? என்பவை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்.
உண்மையை வெளிப்படுத்துவதில் தயங்கக்கூடாது. நியாயமான விசாரணை கோரப்படும்போது அலற வேண்டிய அவசியமில்லை.
அரச தரப்பு நபர்கள் இவ்வாறு கூச்சல் போடுவதால் இதில் மறைப்பதற்கு ஏதோ இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
கைகள் சுத்தமாக இருந்தால், அந்தக் கைகளில் இரத்தக்கறை படியவில்லை என்றால், அரசியல் பேரங்களுக்காகப் பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், உண்மையைத் தேட அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார்.