முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 392 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் மற்றும் லபுசேன் இருவரும் சதமடித்து அசத்தினர். லபுசேன் 124 ரன்னும், வார்னர் 106 ரன்னும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட், ஹோஸ் இங்லிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்க சார்பில் சம்ஷி 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் தலா 49 ரன்னும், கேப்டன் பவுமா 46 ரன்னும், டி காக் 45 ரன்னும் எடுத்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 41.5 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது லபுசேனுக்கு வழங்கப்பட்டது.