மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்த இருவர் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘றொக்ஸ் ரீம்’ என அழைக்கப்படும் குழுவைச்சேர்ந்த செந்தூரன் மற்றும் தனு ஆகியோரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் யாழ் நீதவான் நிதிமன்றில் நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது குறித்த நபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அண்மையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தார்கள் என பொதுமக்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் இவ்வாறான சட்டவிரோதக் குழுக்களின் செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துவதுடன், இவர்களுக்கான தண்டனைகள் அதிகமாக்கப்பட வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.