கேப்பாப்பிலவு மக்களின் காணி உள்ளடங்கலாக ராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர்.
கேப்பாப்புலவு விடயம் தொடர்பாக யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில், தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கேப்பாப்புலவு மக்களின் காணிகளை கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், உடனடியாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாவிடின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவை சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.