இலங்கையில் இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மிகவும் அவதானத்துடன் கையாள்வதற்கு முயற்சிக்கின்றோம் என ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்தோடு சித்திரவதைகளை சிறிதளவும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை அரசு பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட மங்கள, இவற்றிற்கு மேலும் பல தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுவதால் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளமை இதுவே முதற்தடவையென கூறப்படுகின்றது. மேலும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சித்திரவதைக்கு எதிரான அமைப்பு மற்றும் ஜொகன்னஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு இலங்கையில் செயற்பட்டு வரும் உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு என்பன அரச படைத்தளங்களில் சித்திரவதைகள் இடம்பெற்றுவருவதை ஆதாரங்களுடன் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.