எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக ஜனாதிபதி காட்டி காலத்தை கடத்துகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (14.09.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்
11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.
அந்த வகையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.
வடகிழக்கிலே நில அபகரிப்புகள்
அந்த அறிக்கையில் இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.