நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ படமும், புகைப்படங்களும் தங்களிடம் இருப்பதாக ‘முகநூல்’ பக்கம் ஒன்றில் ஒருவர் தமிழில் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சிகளை பகிர்ந்துகொள்வதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். அதில், ஒரு தொலைபேசி எண்ணும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பாலியல் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, ‘பிரஜ்வாலா’ என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் மதன் பி.லோகுர் தலைமையிலான சமூகநீதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அபர்ணா பட், நடிகை பாவனா வீடியோவை வெளியிடப்போவதாக ‘முகநூல்’ பக்கத்தில் வெளியான தகவலை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், அந்த வீடியோவையும், காட்சிகளையும் வெளியிடுவதை தடுத்து நிறுத்த எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ‘முகநூல்’ நிறுவனத்துக்கு வாய்மொழியாக உத்தரவிட்டனர்.
மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்குமாறு ‘முகநூல்’ நிறுவனத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஆபாச வீடியோக்களை தடுப்பது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு சமூக வலைத்தளங்களுக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, பாவனாவின் வீடியோ படத்தை வெளியிடுவதாக கூறிய ‘முகநூல்’ பக்கம் மறைந்துவிட்டது.