நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும், அவர்கள் மீளெழுச்சி பெற எந்தப் பிரஜையும் துணை போகக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் தேசாபிமான பெருமிதத்துடன் பௌத்தத்தை முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றி நாட்டைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்து இறுதியில் நாட்டின் வளங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் எனவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு திருடர்கள் குழு
அவர் மேலும் கூறுகையில், கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதிப் பதவியையும் பிரதமர் பதவியையும் பெற நாம் தயாராக இல்லை.
மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதிக் கதிரைக்குச் சென்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையை மறைத்து வருகின்றார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட முன்னைய ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத விதமாக அவர் மறைத்து வைத்துள்ளார். உண்மையை மறைப்பதால் தேசிய பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படும்.
மக்கள் ஆணை
பூரண அரசாட்சியைத் தருவதாகக் கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ, பிரதமர் பதவியையோ, ஏனைய பதவியையோ, அரச அதிகாரத்தையோ பெற தாம் தயார் இல்லை.
நாட்டை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை அபகரித்த ஜனாதிபதியையும் குடும்பத்தையும் விரட்டியடிக்க மக்கள் ஒன்றாய் வீதியில் இறங்கி நடந்திய போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கம் என்ற வார்த்தை முக்கியமான அரச கொள்கையாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.