மாலபே தனியார் வைத்திய கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாக்குமாறு வலியுறுத்தி வடமாகாண வைத்தியர்கள் நாளை (வியாழக்கிழமை) 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார்.
அத்துடன் ‘இது இலங்கை மருத்துவ சேவையின் தரத்தினைப் பாதுகாப்பதற்காகவும், மருத்துவர்களை அரசியல் செல்வாக்கு மற்றும் பணத்துக்காக உருவாக்குவதால், நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமையும்’ எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும், அவசரநிலைகள் அல்லது விபத்துகளின் போது வைத்தியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.