தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுவாசல் போராட்டக் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை தட்சிணாமூர்த்தி என்பவர் தலைமையில் பத்துபேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழு பிரதிநிதிகள் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய்பாஸ்கருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.