மேலும், குற்றவாளிகள் அந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் வீடியோ படமாகவும், புகைப்படமாகவும் பிடித்ததாக தகவல்கள் வெளியாகின.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், கேரள சட்டசபையில் புயலைக் கிளப்பியது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி, அவரது கூட்டாளி வி.பி.விகீஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பல்சர் சுனியிடமும், விகீஷிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், “இந்த வழக்கில் விசாரணை சூடுபிடித்த நிலையில், செல்போன் முக்கிய ஆதாரம் ஆகிவிடும் என்று கருதினோம். எனவே அந்த செல்போனை நாங்கள் கொச்சியில் உள்ள ஏரியில் வீசிவிட்டோம்” என்று கூறினர்.
உடனே அவர்களை போலீசார் அங்கு அழைத்துச்சென்றனர். அந்த ஏரி பாலத்தில் நின்றவாறு, அவர்கள் செல்போனை ஏரிக்குள் வீசியதை நடித்துக்காண்பித்தனர்.
இதையடுத்து கொச்சி ஏரியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்தி செல்போனை தேடிகண்டுபிடிக்க போலீஸ் முடிவு செய்தது.
இதற்காக கடற்படையின் உதவியை போலீஸ் தரப்பில் நாடினர். தற்போது கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் 5 பேர் அடங்கிய குழுவினர், கொச்சி ஏரியில் மூழ்கி செல்போனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த செல்போன் சிக்கினால் அது இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் ஆகிவிடும்.
இந்த தகவலை கடற்படை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.