சீதுவ – தண்டுகங் ஓய பகுதியில் நபரொருவரை அடித்துக் கொன்று பயணப் பையில் சடலத்தை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடாவெவ – மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுசந்த ரஞ்சன் ரணசிங்க என்ற 36 வயதான திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதான சந்தேகநபரின் மூத்த மகனை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவத்தின் அடிப்படையில் குறித்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மோசடி பணம்
படுகொலை செய்யப்பட்ட இளைஞன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பல இருப்பதாக தெரியவந்துள்ளது.
மாதம்பே, கட்டான, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனும் சந்தேகநபர்களும் நட்பாக பழகியவர்கள் எனவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட இளைஞன்
கடந்த 11ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் குறித்த இளைஞனை சந்தேகநபர்கள் சந்தித்ததாகவும், குறித்த இளைஞனை சூட்சுமமாக தமது காரில் ஏற்றி கட்டான பிரதேசத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனிடம் பணம் கேட்டு கைகளாலும் தடியாலும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னரே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.