ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நியூயோர்க்கில் உள்ள மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு பிரிவு தலைவர் ஸ்ரீமத் நிக் கிளெக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படும் வெறுப்பு கருத்துக்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
எதிர்காலத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றக் குழுக்களின் மீளாய்வின் போது இந்த சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைச் சேர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையின் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.
மெட்டா நிறுவனம்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலங்கை அரசாங்கத்திற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்கு மெட்டா நிறுவனத்துடன் ஒத்துழைப்புத் திட்டத்தை நிறுவுவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தைத் தணிக்க தரவு சார்ந்த திட்டங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிலையில் இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அபிவிருத்தியில் கல்விக்கு விசேட கவனம் செலுத்துவது தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.